தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Wednesday, November 16, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு- 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் 7 முஸ்லிம்கள் இன்று விடுதலை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே வந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 5 வருடமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசிமானந்த் கைது செய்யப்பட்டது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வலது சாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ மீண்டும் புலனாய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து என்ஐஏவுக்கு அது ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் அப்பாவிகள். அவர்களுக்குப் பதிலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.

இதையடுத்து 9 பேரும் ஜாமீன் கோரி இந்த மாத தொடக்கத்தில் மனு செய்தனர். அதற்கு என்ஐஏ ஆட்சேபிக்கவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் 9 பேரில் முகம்மது அலி மற்றும் ஆசிப் கான் ஆகியோருக்கு 2006ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வழக்கு உள்ளதால் அவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை.

ஜாமீன் வழங்கப்பட்ட 7 பேரும் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மக்தூமி, சிறைக்குப் போனபோது அவரது குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. கடந்த 5 வருடங்களாக அவர்கள் தந்தையைக் காண முடியாமல் தவித்துப் போயிருந்ததாக மக்தூமின் மனைவி தெரிவித்தார்.

அதேபோல இன்னொரு டாக்டரான சல்மான் பார்சியின் மனைவி நபீசா அன்சாரி கூறுகையில், எனது கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் அக்கம்பக்கத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோம். அந்த அவமானத்தை சொல்லில் சொல்ல முடியாது. இப்போது நீதி கிடைத்துள்ளது. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலும் கிடைத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்றார்.

தற்போது விடுதலையாகியுள்ள 7 பேரும், தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
Thank : thatstamil.in

No comments:

Post a Comment