தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Monday, January 9, 2012

‘தானே புயல்’ நிவாரண உதவி 10 லட்சம், நேரடி களத்தில் TNTJ, நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன்!


முதல் கட்டமாக அறிவித்த TNTJ

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது. காற்றின் வேகம் காரணமாக கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளில் இருந்த அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த மரங்கள் பெரும்பாலாணவை வீடுகள் மீது விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் சாதாரணமானது அல்ல! அது 50 வருடத்திய மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துச் சென்றுவிட்டது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயமும், கடல்சார் தொழில்களும் தான் அந்தப் பகுதி மக்களின் பிழைப்பாதாரம். பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் வாழைத்தோப்புகள், முந்திரித்தோப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவை முழுமையாகச் சேதமடைந்தன.
பலா மற்றும் வாழை மரங்கள் ஆகியவை வேறோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்ட மக்கள் தங்களின் பிழைப்பை இழந்து நிற்கின்றார்கள். விவசாயிகளாக இருந்த மக்களின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை, கரும்பு போன்றவை புயலின் சீற்றத்தால் உருக்குலைந்து போனது. கடல் பகுதிகளும் வாழும் மக்களின் படகுகளும்,வலை உபகரணங்களும், வீடுகளும் சேதமடைந்தன.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் குடிநீர் கிடைக்காமல் கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். குடிநீர் மட்டுமின்றி உணவுக்கும் வழியில்லாமல் கடலூர், பாண்டி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.

புயலின் வேகத்தால் சாய்ந்து போன மரங்களைப் போல மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் வழங்கமுடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்கின்றது. புயல் தாக்கிய அன்று முதல் இன்றைய தினம் வரைக்கும் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியின் பலபகுதிகள் மின்சாரம் கிடைக்காமல் அந்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

நிலைமை சீரடைந்து மீண்டும் பழைய நிலைக்கு கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் திரும்புவதற்கு இன்னமும் ஆறு மாத காலங்கள் ஆகும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நிவாரணப் பணிகளில் கடுமையான மெத்தனப்போக்கு காட்டப்படுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை ஆராய்ந்து அதன்பின்னர் நிவாரண உதவிகளை அறிவித்தனர். இன்னும் சிலர் அவர்களின் கட்சிக்காரர்கள் பரிந்துரை செய்த சொற்ப சிலருக்கு நிதி உதவிகள் வழங்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

ஆனால் இந்தப் புயலால் உண்மையிலே பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்பது தான் கண்கூடு. அரசியல் கட்சிகள், நாங்களும் வந்து சென்றோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே மட்டுமே இதுபோன்ற பார்வையிடுதல் வேலைகளை செய்து கொண்டிருந்த போது இதிலிருந்து வேறுபட்டு மக்களின் துயர்துடைக்க நேரடியாகக் களமிறங்கி அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

கடலூர்,பாண்டி ஆகிய மாவட்டங்களில் புயலால் சேதாரங்கள் ஏற்பட்ட மறுநாள் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்த சகோதரர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களிளை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்யாவசியத் தேவையான தண்ணீர்,பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர்.

இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

புயல் தாக்கியது முதல் மாநிலத் தலைமையில் இருந்து மாவட்ட மற்றும் கிளைகளின் பணிகள் கேட்டறியப்பட்ட வண்ணம் இருந்தன. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்ற தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைமைக்கு கொண்டு வந்தனர்.

உணவு,உடை,உறைவிடம் என அத்யாவசியத் தேவைகள் எதுவுமில்லாமல் நிற்கும் இந்த மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்படி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் விவரங்களைத் திரட்டுமாறு அந்தந்தக் கிளைகளுக்கு தகவல் தரப்பட்டது. கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு உண்மையாகவே பாதிப்புக்குள்ளாகியிருந்தவர்களின் பட்டியலைச் சேகரித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கடந்த 04/01/2011 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவலவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர் துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர்

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிளைக்கும் தகவல் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து ஒவ்வொருவருக்கும் டோக்கன் கொடுக்குமாறும் டோக்கனுடனும் ரேஷன் கார்டுடனும் குறிப்பிட்ட இட்த்தில் திரட்டி வைக்குமாறும் முன்னரே தலைமை மூலம் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஒவொரு ஊருக்கும் நிர்வாகிகள் வரும் நேரமும் தெரிவிக்கப்பட்ட்து.

திட்டமிட்ட படி சென்ற இந்த நிவாரணக் குழுவினர், முதலில் பண்ருட்டிக்குச் சென்றனர்.
பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ 2,000 த்தை முதல் கட்டமாக நிவாரண உதவியாக வழங்கினார்கள்.

பண்ருட்டியில் வழங்கப்பட்ட நிவாரணத்தைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் களம் கண்ட இடம் மேல்பட்டாம்பாக்கம். இந்தப் பகுதியும் புயலின் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிதான். இங்கிருந்த மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நின்றவர்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய்கள் ரொக்கமாக வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தானே புயல் காரணமாக இந்தப் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் அடியோடு சேதமடைந்தன. குடிசைகள் அப்படியே வீழ்ந்ததாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்கள் வீணாயின.

தானே நிவாரண நிதி மற்ற பகுதிகளை விட பரங்கிப்பேட்டையில் தான் அதிகமான குடும்பத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.

பரங்கிப்பேட்டையைத் தொடர்ந்து கடலூர் OT பகுதிக்கு சென்ற நிர்வாகிகள் அங்கிருந்த கிளை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலா 2000 ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சென்ற நிவாரணக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 2000 வீதம் வழங்கினார்கள்.

இதன் பின்னர் பாண்டிச்சேரியை நோக்கித் துவங்கியது அவர்களின் பயணம். பாண்டிச்சேரி சுல்தான் பேட்டை கிளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலா 2000 வீதம் வழங்கினார்கள்.

இந்த உதவி வழங்கும் நிகழ்வில் எவ்வித தள்ளுமுள்ளும் இன்றி அனைத்து சகோதர சகோதரிகளும் தனித்தனியாக வரிசையில் நின்றபடி அமைதியாக வாங்கிச் சென்றனர்.

பொதுவாக ஒரு மத அமைப்பு அவர்கள் சார்ந்த மத மக்களுக்கு மட்டுமே இதுபோன்ற உதவிகளை மேற்கொள்ளும். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கிய நிவாரண உதவியில் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி மாற்று மதத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளும் அதிகமானோர் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த அரசியல் கட்சியுமே அந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் முழுமையாக வழங்கிடாத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த உதவி அந்த மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தறுவதாக அமைந்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதற்கட்டமாக அறிவித்த இந்த பத்து லட்சம் ரூபாய் நிதி அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட ஒரு முதலுதவி நிதியாகுமே தவிர இது அவர்களின் துயரத்தைப் போக்கிவிடாது. இவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் மீதுமே இருக்கின்றது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்னமும் அதிகமான நிவாரணத்தை வழங்குவதற்கு வாக்களித்துள்ளது. இது இறைவனின் கிருபையால் நீங்கள் கரம் கொடுக்காமல் சாத்தியமாகாது.

நன்றி tntj.net

No comments:

Post a Comment